தமிழ்நாடு

அமைச்சரவை மாற்றமா?- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Published On 2024-09-14 06:21 GMT   |   Update On 2024-09-14 06:21 GMT
  • தி.மு.க. என்பது சொன்னதை தான் செய்யும்.
  • ஒப்பந்தங்கள் மேற்கொள்ள விரும்புகிற மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் வகையில் திட்டமிட்டு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.

இதற்காக சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று தொழில்அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்து வருகிறார்.

அந்த வகையில் ஏற்கனவே துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று வந்தார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரங்களுக்கு சென்று தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார்.

தொழில்துறையில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து தமிழ் நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அழைப்பு விடுத்தார். அப்போது புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.


கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், நோக்கியா, டிரில்லியன்ட், ஆட்டோ டெஸ்க், ஆர்.ஜி.பி.எஸ்.ஐ., லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம், விஷய் பிரிஷின், ஈட்டன், போர்டு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேசியதன் விளைவாக 19 நிறுவனங்களுடன் ரூ.7 ஆயிரத்து 7618 கோடி முதலீட களை ஈர்க்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு சிகாகோ நகரில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு துபாய் வழியாக இன்று காலை சென்னை திரும்பினார்.

அவரை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் துரை முருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மேயர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் திரண்டு நின்று வரவேற்றனர்.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்கா நாட்டுக்கு போன அரசு முறை பயணத்தை நிறைவு செய்து விட்டு, சென்னைக்கு திரும்பி இருக்கிறேன்.

இது வெற்றிகரமான பயணமாகவும், இன்னும் சொல்ல வேண்டுமானால் ஒரு சாதனைக்குரிய பயணமாகவும் அமைந்துள்ளது. இது தனிபட்ட எனக்கல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு சாதனை பயணமாக இந்த பயணம் அமைந்து உள்ளது.

உலக நாடுகளில் இருக்க கூடிய தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களது தொழிலை தொடங்குவதற்கு, தொழில் முதலீடுகள் செய்ய, வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த 28.8.2024 அன்று நான் அமெரிக்கா சென்றேன். 12.9.2024 வரை அங்கு இருந்திருக்கிறேன்.


இந்த 14 நாட்களும் மிக பெரிய பயனுள்ளதாக இந்த பயணம் அமைந்திருந்தது.

உலகின் புகழ் பெற்ற தலை சிறந்த 25 நிறுவனங்களுடன் நான் சந்திப்பை நடத்தி இருக்கிறேன். இதில் 18 நிறுவனங்கள் பார்ச்சூன் -500 நிறுவனங்களுடன் இந்த சந்திப்பின் போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சான்பிரான்சிஸ்கோ நகரில் 8 நிறுவனங்களுடனும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.

இந்த 19 ஒப்பந்தங்கள் மூலமாக 7,618 கோடி ரூபாய் முதலீடு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் 11 ஆயிரத்து 516 பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீடுகள் திருச்சி, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் என பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

கடந்த 29.8.2024 அன்று சான்பிரான்சிஸ்கோ நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், மற்ற நிறுவன தலைவர்கள் பங்கேற்றார்கள்.

தமிழ்நாடு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான பணியில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த நிறுவனங்களை நான் கேட்டுக் கொண்டேன்.

இன்னும் பல நிறுவனங்கள் வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன. இதெற்கெல்லாம் மகுடம் வைத்தது மாதிரி தமிழ்நாட்டில் 30 ஆண்டு காலமாக செயல்பட்டு, தவிர்க்க இயலாத காரணத்தால் சில சூழ்நிலைகளால் உற்பத்தியை நிறுத்திய போர்டு நிறுவனம், எங்கள் வேண்டுகோளை ஏற்று சென்னை மறை மலைநகரில் இருக்கக் கூடிய தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளது.

2 நாளைக்கு முன்பு பேசும்போது, அந்த நிறுவனத்தை சார்ந்தவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், நாங்கள் கமிட்டி போட்டு மெம்பர்களிடம் பேசி விட்டு அதற்குப் பிறகு சொல்கிறோம் என்றார்கள்.

இதன் பிறகு நாங்கள் கொஞ்சம் விருப்பத்தை அதிகமாக தெரிவித்ததன் காரணமாக, எல்லா வசதியையும் செய்து கொடுக்கிறோம் என்ற எங்களின் நம்பிக்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, சரி நீங்கள் போங்கள். 2 நாட்களுக்குள் மகிழ்ச்சியான செய்தியை தெரிவிப்பதாக கூறினார்கள்.

நாங்கள் சிகாகோ நகரில் விமான நிலையத்தில் ஏறி அமர்ந்த பிறகு செய்தி கிடைத்தது. சம்மதம் தெரிவித்து விட்டார்கள் என்று. அந்த செய்தியை உங்களோடு நான் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், இந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்று, அவர்கள் உற்பத்தியை தொடங்குவதற்கான எல்லா உதவிகளையும் வழங்குவதற்கு நான் ஆணையிட்டுள்ளேன்.

அதே போல் எனது கனவு திட்டமான நான் முதல்வர் திட்டம் வழியாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு மேற்கொண்டு அதன் மூலமாக வளமான எதிர்காலத்தை உருவாக்குகிற வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றிய பயிற்சி வழங்கப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கூகுள் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

ஆட்டோ டெஸ்க் நிறுவனங்களுடன் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காகவும், குறுசிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஸ்டாட் உள்ளிட்ட தொழில் துறை, சுற்றுச் சூழல் அமைப்புகளின் போட்டித் தன்மையை மேம்படுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள விரும்புகிற மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

31.8.24 அன்று சான்பிரான்சிஸ்கோவிலிலும், 7.9.24 அன்று சிகாகோ நகரத்திலும் நடைபெற்ற தமிழ் கூட்டமைப்பு தமிழ் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கா வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றினேன். இது தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது.

அமெரிக்க தமிழ் அமைப்புகள் எல்லாவற்றுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒப்பந்தம் செய்துள்ள எல்லா நிறுவனங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:-முதலீட்டு ஒபந்தங்கள் தொடர்பாகவும், வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாகவும், வெள்ளை அறிக்கைகள் வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்களே?

மு.க.ஸ்டாலின் பதில்:-அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே உங்களை சந்தித்து தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டு காலத்தில் வந்த முதலீடுகள் பற்றி நான் விளக்கமாக சொல்லி இருக்கிறேன். அது மட்டுமல்லாமல், தொழில் துறை அமைச்சரும் புள்ளி விவரங்களோடு விளக்கி இருக்கிறார். சட்டமன்றத்திலும் அவர் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதை எதிர்க்கட்சி தலைவர் மட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவராக இருக்க கூடிய எடப்பாடி பழனிசாமி படித்து பார்த்து தெரிந்து கொள்ள சொல்ல வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு போனதாக சொன்னார்கள். அதில் 10 விழுக்காடு ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதை சொன்னால் உள்ளபடியே அவருக்கு பெரிய அவமானமாக இருக்கும். அதனால் அதை தவிர்த்து விடுகிறேன்.

கேள்வி:-அமெரிக்க பயணத்துக்கு முன்னதாக மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லி இருந்தீர்கள்? அமைச்சரவை மாற்றம் நிகழுமா?

பதில்:- தி.மு.க. என்பது சொன்னதை தான் செய்யும். சொல்வதைதான் செய்வோம். ஒரே வரியில் சொல்லி விடுகிறேன். இன்றைக்கு 75-ம் ஆண்டு விழாவை கொண்டாடிடும் வகையில் தி.மு.க. பவள விழாவை கொண்டாட இருக்கிறது. ஆக நிச்சயமாக உறுதியாக நீங்கள் எதிர்பார்க்க கூடிய சூழ்நிலை உருவாகும் என்று நம்புகிறேன்.

கேள்வி:-விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இது அரசியல் கலந்த பேசும் பொருளாகி இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் ஏதும் ஸ்திரதன்மை இல்லையா? நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பதில்:-அதுபற்றி திருமாவளவளனே விளக்கம் சொல்லி இருக்கிறார். அந்த விளக்கத்துக்கு பிறகு நான் பெரிய விளக்கம சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி:-அமெரிக்க பயணம் வெற்றி என்று சொல்கிறீர்கள்? அதே சமயத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறும்போது கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் ஈர்த்த முதலீட்டை நீங்கள் முதலீடு ஈர்த்தது வெறும் 7 ஆயிரம் கோடிதான் என்று சொல்கிறாரே?

பதில்:-அப்படியல்ல. அவங்க மாநிலத்துக்கு அவர்கள் தட்டிக் கேட்க உரிமை இருக்கிறது. அதே போல் நாங்களும் நம்முடைய மாநிலத்துக்கு என்னென்ன வேண்டுமோ என்ன என்னென்ன வசதி ஏற்படுத்த வேண்டுமோ அதை கேட்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News