தேர்தல் நடத்தை விதிகளை மீறிய தி.மு.க., பா.ம.க., நாம்தமிழர் கட்சி பிரமுகர்கள் 12 பேர் மீது வழக்கு
- தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அரசியல் கட்சியினர் மீது தேர்தல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
- நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் நாராயணசாமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி இறுதிக்கட்ட பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் ஓய்கிறது.
இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அரசியல் கட்சியினர் மீது தேர்தல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வாக்கூரில் அனுமதியின்றி பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சி மாவட்டசெயலாளர் பூபாலன், விக்கிரவாண்டி பஸ் நிறுத்தம் அருகில் அனுமதியின்றி கட்சிக்கொடி கம்பங்களை நட்டதாக நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் நாராயணசாமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் விராட்டிக்குப்பத்தில் விளம்பர பதாகை வைத்த தி.மு.க. நகர இளைஞரணி செயலாளர் கலைச்செல்வன், சானாந்தோப்பில் கொடி தோரணங்களை கட்டிய பா.ம.க. கிளை செயலாளர் மதியழகன், கடையத்தில் கொடி தோரணங்களை கட்டிய தி.மு.க. நிர்வாகிகள் தேவேந்திரன், குணசேகரன், பா.ம.க. நிர்வாகி கணேசன், ஆரியூரில் கொடிக்கம்பம் நட்ட பா.ம.க. கிளை செயலாளர் விஜயகுமார், அதே பகுதியில் விளம்பர பதாகை வைத்த தி.மு.க. கிளை செயலாளர் ராகுல், சி.என்.பாளையத்தில் விளம்பர பதாகைவைத்த தி.மு.க. கிளை செயலாளர் முருகன், அயினம்பாளையத்தில் விளம்பர பதாகை வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுந்தரவளவன், செ.குன்னத்தூரில் விளம்பர பதாகை வைத்த தி.மு.க. நிர்வாகி புஷ்பா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 12 பேர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.