தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் நேரக் கட்டுப்பாட்டை மீறியும், அதிக சத்தத்துடனும் பட்டாசு வெடித்த 345 பேர் மீது வழக்கு

Published On 2022-10-25 08:42 GMT   |   Update On 2022-10-25 08:42 GMT
  • தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
  • அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்த குற்றத்துக்காக 69 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது.

தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அதனை பொதுமக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. நேரக் கட்டுப்பாட்டை மீறி 24 மணி நேரமும் பட்டாசுகளை வெடித்துக்கொண்டே இருந்தனர்.

இது தொடர்பாகவும், பட்டாசு உரிமம் தொடர்பாகவும் சென்னை மாநகர் முழுவதும் 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீசாரின் நேரக் கட்டுப்பாட்டு அறிவிப்பை மீறி பட்டாசுகளை வெடித்ததாக 271 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் போலீசார் தீபாவளி அன்று ரோந்து சென்று இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, இதுபோன்ற நேரங்களில் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது உள்ளது. இருப்பினும் தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக 271 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இது தவிர அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்த குற்றத்துக்காக 69 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பாகவும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 14 பட்டாசு விற்பனை யாளர்கள் சிக்கினர். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News