ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் ரூ.6 கோடி லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
- பொதுமக்கள் முதலீடு செய்த சுமார் ரூ. 600 கோடியை சுருட்டி கொண்டு ஹெலிகாப்டர் சகோதரர்கள் தலைமறைவாகினர்.
- சோமசுந்தரம், கண்ணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ், சாமிநாதன் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தொகை தருவதாக கூறினர். இதனை உண்மை என்று நம்பிய பொதுமக்கள் ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர்.
ஆனால் பொதுமக்கள் முதலீடு செய்த சுமார் ரூ. 600 கோடியை சுருட்டி கொண்டு ஹெலிகாப்டர் சகோதரர்கள் தலைமறைவாகினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரகுபிரசாந்த், சீனிவாசன் ஆகியோர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் புகார் செய்தனர். இதையடுத்து மோசடி செய்த சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.
இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு கணேஷ் தனது தாயாரின் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார் . அப்போது தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்ராக பணிபுரிந்த சோமசுந்தரம், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகிய 2 பேரும் கோயம்புத்தூரில் இருந்த கணேசிடம், பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.1 கோடி மற்றும் மற்ற முதலீட்டாளர்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 கோடி என மொத்தம் ரூ.6 கோடி லஞ்சம் தருமாறு கேட்டனர்.
இதனால் நாம் இந்த வழக்கில் இருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்த கணேசன் முன்பணமாக ரூ.10 லட்சத்தை தனது ஊழியர் மூலமாக தஞ்சாவூரில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து கொடுத்துள்ளார். இருப்பினும் இந்த தகவல் வெளியே வர தொடங்கியது. போலீசார் 2 பேர் லஞ்சம் வாங்கிய விவகாரம் பற்றி தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
இதனைத் தொடர்ந்து சோமசுந்தரம், கண்ணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்துக்கும் பரிந்துரை செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.