ராமதாஸ் தலைமையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆலோசனை
- பா.ம.க. சார்பில் இன்று நடைபெறும் சமூக நீதி பாதுகாப்புக்கான சாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்கம் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.
- மத்திய, மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
இந்தியாவில் சாதிவாரியாக மக்கள்தொகையை கணக்கெடுக்க பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
பா.ம.க. சார்பிலும் சமூக நீதியை காப்பதற்காக சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பா.ம.க. சார்பில் சென்னை தி.நகரில் உள்ள சர் பி.டி.தியாகராயர் அரங்கில் சாதிவாரியாக மக்கள்தொகையை கணக்கெடுப்பது தொடர்பாக கருத்தரங்கம் மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகித்தார். இதில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சுதர்சன நாச்சியப்பன், வக்கீல் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தலைவர்கள் மற்றும் வல்லுனர்கள் பங்கேற்று சாதிவாரியாக கணக்கெடுப்பது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் சமூக நீதியை காப்பாற்ற சாதிவாரியாக மக்கள்தொகையை கணக்கெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேசினார்கள்.
பா.ம.க. சார்பில் இன்று நடைபெறும் சமூக நீதி பாதுகாப்புக்கான சாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்கம் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தலைவர்களும், வல்லுநர்களும் தங்களது கருத்துக்களை முழுவதுமாக எடுத்துரைத்தனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்று மாலை வரை இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.