`மண் காப்போம்' வாழை திருவிழாவில் விஞ்ஞானி செல்வராஜன் புகழாரம்
- இந்தியா வாழை உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கிறது.
- 37 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறோம்.
'ஈஷா மண் காப்போம்' இயக்கம் சார்பில் 'வாழ வைக்கும் வாழை' எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் கல்லூரியில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ICAR-NRCB இயக்குனர் செல்வராஜன், "சத்குரு உலகமெங்கும் பயணித்து, மண் காப்போம், மண் நமது உயிர் என ஐ.நா அமைப்புகள் மற்றும் பல்வேறு உலக நாடுகளில் மண் வளம் காக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்" என பாராட்டினார்.
இத்திருவிழாவின் நோக்கம் குறித்து மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஶ்ரீமுகா பேசுகையில், "திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயம் பிரதானமாக இருக்கிறது. பல விவசாயிகள் வாழை விவசாயம் என்பது வாழை சாகுபடியோடு நின்று விடுவதாக நினைக்கிறார்கள்.
ஆனால் வாழையில் அதன் அனைத்து பாகங்களையும் மதிப்பு கூட்ட முடியும். இவ்வாறு மதிப்பு கூட்டுவதன் மூலம் சிறு விவசாயிகள் கூட தொழில் முனைவோர்கள் ஆக முடியும். எனவே அது குறித்த உத்திகளை, தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது" என பேசினார்.
இவ்விழாவில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் செல்வராஜன் பேசுகையில், "ஈஷாவால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர். இது போன்ற விவசாயிகளை ஒருங்கிணைத்து பயிற்சி கருத்தரங்குகளை நடத்துவதற்கு ஈஷாவிற்கு நன்றி.
இந்தியா வாழை உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கிறது. நாம் 10 லட்சம் ஹெக்டேர் வாழை சாகுபடி செய்து 37 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறோம். ஆனால் 3 லட்சம் டன் மட்டுமே ஏற்றுமதி செய்கிறோம்.
மேலும் ஒரு ஏக்கர் பூவன் வாழை தண்டிலிருந்து 20,000 லிட்டர் ஜூஸ் எடுக்கலாம். 200 மில்லி ஜூஸை ரூ.25 விற்கிறோம். 20,000 லிட்டரில் 25 லட்சம் வரை வருமானம் எடுக்க முடியும் இது 6 மாதம் வரை கெட்டுப்போகாது.
மேலும் சிறுநீரக கல்லை குறைக்க இந்த ஜூஸ் உதவுகிறது. இது போல வாழை பூ, வாழை காய் என அனைத்தையும் மதிப்பு கூட்டலாம்" எனப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய முன்னோடி விவசாயி திருமதி. சியாமளா குணசேகரன், 'எந்தவொரு தொழில் செய்பவரும் தான் உற்பத்தி செய்வதை குறைந்த விலைக்கு விற்பதில்லை.
ஆனால் விவாசயிகள் மட்டுமே தங்கள் கண் முன்பே தங்கள் உற்பத்தியை குறைந்த விலைக்கு விற்கும் சூழல் உள்ளது. இதிலிருந்து வெளி வர வேண்டும் என நினைத்தேன்.
வாழை சார் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தொடங்கினேன். நம் தோட்டத்தில் பணம் கொட்டிக் கிடக்கிறது. பண்ணையில் கிடைக்கும் அருகம்புல் எடுத்து ஜூஸ் போட்டு கொடுத்தால் காசு, குப்பை மேனியை சோப் செய்து கொடுத்தால் காசு, ஒரு காலத்தில் என் தோட்டத்தில் தேங்காய் மரங்களை வெறும் ரூ.5000-த்திற்கு குத்தகை கொடுத்தேன். ஆனால் இப்போது ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் எடுத்து ஒரு கிலோ சோப் செய்கிறோம் அதை ரூ.800-க்கு கொடுக்கிறோம்.' எனப் பேசினார்.
மேலும் வாழை சார் தொழில் முனைவோர்களான எஸ்.கே. பாபு, ராஜா, அஜிதன், ஜமின் பிரபு மற்றும் முன்னோடி விவசாயி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இவர்களோடு திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகளான கற்பகம், சுரேஷ்குமார், ஜெயபாஸ்கரன் மற்றும் ஜி. பிரபு ஆகியோர் பங்கேற்று தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சேவைகள், அரசு திட்டங்கள், வாழை ரகங்கள், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், மதிப்புகூட்டப்பட்ட பொருட்களுக்கு வாழை சார் ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை குறித்து பேசினர்.
இந்த கருத்தரங்கின் முக்கிய நிகழ்வுகளாக வாழையில் மதிப்பு கூட்டப்பட்ட 50-க்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் மற்றும் வாழை நாரால் ஆன 150-க்கும் மேற்பட்ட கைவினை பொருட்கள் விற்பனைக்கும் கண்காட்சிக்கும் வைக்கப்பட்டன.
மேலும் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட சிறுதானிய திண்பண்டங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டது.
வாழை விவசாயிகளுக்கும் வாழை சார் தொழில் முனைவோர்களுக்கும் 'சிறந்த வாழை விவசாயி' விருதுகள் வழங்கப்பட்டன.
'ஈஷா மண் காப்போம்' இயக்கம் கடந்த 15 வருடங்களாக நம் மண்ணின் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து விவசாய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
இவ்வியக்கம் மூலம் இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.