புதுச்சேரி அரசு அதிகாரி உள்பட 5 பேர் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு
- தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குவதற்கு சீனிவாச ராவ் லஞ்சம் பெறுவதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
- மாசுகட்டுப்பாடு அதிகாரி சீனிவாச ராவ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறையில் அறிவியல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சீனிவாச ராவ்.
தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குவதற்கு சீனிவாச ராவ் லஞ்சம் பெறுவதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் பேரில் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புதுவை அண்ணா நகர் வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதனையடுத்து மாசுகட்டுப்பாடு அதிகாரி சீனிவாச ராவ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பாக சி.பி.ஐ. ஊழல் தடுப்புபிரிவு போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி லிங்கா ரெட்டிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தேவையான அனுமதி வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதற்காக மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அறிவியல் அதிகாரி சீனிவாச ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர் ஒருவர் மீதும் கோவையைச் சேர்ந்த ஒருவர் மீதும் புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 5 பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.