வெள்ள பாதிப்பு பகுதிகளில் மத்தியக்குழு நேரில் ஆய்வு
- மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து ஆய்வுக்கு சென்றார்கள்.
- வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும், சாலைகள் சேதமாகி உள்ளதையும் பார்த்தார்கள்.
சென்னை:
மிச்சாங் புயல் மற்றும் கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சென்னையில் பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், அம்பத்தூர், முடிச்சூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் உட மைகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்தனர்.
மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்ததால் ரூ.5,060 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து கடந்த 7-ந்தேதி மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் சென்னை வந்தார். ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து வெள்ள நிவாரண நிதியாக ரூ.450 கோடியையும், சென்னை வெள்ளத் தடுப்பு சிறப்பு திட்டத்துக்காக ரூ.501 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கியது.
இதற்கிடையில் மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை நியமித்தது.
இந்த குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகள் ஏ.கே.சிவஸ்ரீ, பாவ்யா பாண்டே, நிதித் துறையை சேர்ந்த ரங்கநாத் ஆதம், மின்சாரத் துறையை சேர்ந்த விஜயகுமார், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி திமன்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
இந்த குழுவினர் நேற்று நள்ளிரவு 11.40 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னை வந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்கள்.
இன்று காலை 11 மணியளவில் ஆய்வுக்கு புறப்பட்டார்கள். மத்திய குழுவினர் 2 பிரிவாக பிரிந்து ஆய்வுக்கு சென்றார்கள்.
ஒரு பிரிவினர் வடசென்னை பகுதியிலும் இன்னொரு பிரிவினர் தென்சென்னை பகுதியிலும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வடசென்னைக்கு சென்ற குழுவினர் பெரியமேடு-புளியந்தோப்பு டிமலஸ் ரோட்டில் இருந்து தங்கள் ஆய்வை தொடங்கினார்கள். இங்கு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும், சாலைகள் சேதமாகி உள்ளதையும் பார்த்தார்கள்.
அதைத்தொடர்ந்து பட்டாளம் அங்காளம்மன் கோவில் தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, சிவராவ் ரோடு, மோதிலால் தெரு ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கிய குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டனர்.
அதைத்தொடர்ந்து வியாசர்பாடி அம்பேத்கார் கல்லூரி சாலை சந்திப்பு, ஓட்டேரி நல்லா, டிகாஸ்டர் ரோடு, கணேசபுரம் சுரங்கப்பாதை ஆகிய பகுதிகளை பார்வையிட உள்ளனர்.