தமிழ்நாடு (Tamil Nadu)

"சந்திரயான்-3" நிலவின் தென்பகுதியில் நாளை மறுநாள் இறங்குகிறது: திக்... திக்... மன நிலையில் இறுதி 19 நிமிடங்கள்

Published On 2023-08-21 07:32 GMT   |   Update On 2023-08-21 08:59 GMT
  • நிலவுக்கு மிக நெருக்கமான சுற்றுப்பாதைக்குள் 'விக்ரம்' லேண்டர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
  • லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் நிலவில் மெதுவாக கலன் தரையிறக்கப்படும்.

சென்னை:

'சந்திரயான்-3' விண்கலம் நாளை மறுநாள் (23-ந்தேதி) மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் நாளை மறுநாள் மாலை 5.45 மணிக்கு தொடங்க உள்ளது.

அதற்கு முன்னதாக லேண்டரை மிக மிக மெதுவாக நிலவின் மேற்பரப்புக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த பணிகளில்தான் தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்று நிலவுக்கு மிக நெருக்கமான சுற்றுப்பாதைக்குள் 'விக்ரம்' லேண்டர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த பணிதான் மிக மிக முக்கியமான பணியாகும். இந்த இறுதி கட்ட பணியை சவாலாக ஏற்று முடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்த கட்ட நிறைவு பணிக்காக காத்திருக்கிறார்கள்.

'சந்திரயான்-3' திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனில் இருந்து லேண்டர் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக விடுவிக்கப்பட்ட பிறகு அது ஒன்றன்பின் ஒன்றாக நிலவை ஒட்டிய சுற்று வட்டப்பாதையில் வலம் வந்தது. தொடர்ந்து அதன் உயரத்தை படிப்படியாக குறைத்து நிலவில் தரை இறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தற்போது தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி கடந்த 18-ந்தேதி அதன் சுற்றுப்பாதை தூரம் குறைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 24 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்று வட்டப்பாதைக்கு லேண்டர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவே சுற்று வட்டப்பாதை தூரம் குறைப்பதற்கான இறுதி நடவடிக்கை ஆகும்.

இதையடுத்து நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் நாளை மறுநாள் (23-ந்தேதி) மாலை 5.45 மணியளவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். இறுதியாக லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் நிலவில் மெதுவாக கலன் தரையிறக்கப்படும்.

இதற்கான காலம் வெறும் 1 நிமிடங்கள்தான் என்ற போதிலும், 'சந்திரயான்-3' திட்டத்தின் மொத்த வெற்றியும் அந்த இறுதி தருணத்திலேயே அடங்கி உள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

லேண்டர் கலன் சீரான இயக்கத்தில் உள்ளது. அந்த கலன் தனது செயல்பாடு களை தன்னகத்தே ஆய்வு செய்து தரை இறங்க நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் சூரிய உதயத்துக்காக காத்திருக்கும். அதன் பின்னர் நிலவில் வருகிற 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு தரை இறங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் 5.45 மணிக்கு லேண்டர் மெல்ல மெல்ல நிலவின் தென் பகுதியில் தரை இறங்க தொடங்கும். 6.04 மணிக்கு அது தரை இறங்கி விடும். இந்த இடைபட்ட 19 நிமிடங்கள்தான் மிக முக்கியமானது.

இந்த 19 நிமிடங்களும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி உலகம் முழுக்க வாழும் இந்தியர்கள் அனைவரும் திக்... திக்... மனநிலையுடன் இருக்க வேண்டியது இருக்கும். இதில் வெற்றி பெறுவதற்காகவே லேண்டரை கவனமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கையாண்டு வருகிறார்கள்.

லேண்டரின் செயல்பாடுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். கடந்த 2 நாட்களாக லேண்டரில் உள்ள அதிநவீன கேமரா மூலம் நிலவின் தென்பகுதி படம் பிடிக்கப்பட்டுள்ளது.

தென் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களை லேண்டர் கேமரா படம் பிடித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனுப்பி உள்ளது. அந்த புகைப்படங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். நிலவின் தென்பகுதியில் எந்த இடத்தில் லேண்டரை தரை இறக்கினால் மிகவும் சுமூகமாக இருக்கும் என்பதை புகைப்படங்களுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் விவாதித்து வருகிறார்கள்.

லேண்டரில் அதிநவீன லேசர் கருவிகளும் உள்ளன. அவற்றின் துணையுடன் நிலவின் தென் பகுதியில் தரை இறக்குவது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. லேண்டர் அனுப்பிய புதிய புகைப்படங்களை இஸ்ரோ இன்று காலை வெளியிட்டது. நிலவின் தென் பகுதியில் பல்வேறு பகுதிகளை லேண்டர் படம் பிடித்து இருப்பதை அந்த காட்சிகளில் காண முடிந்தது.

நிலவில் இதுவரை ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே தங்களது விண்கலன்களை தரை இறக்கி சாதனை படைத்துள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் இடம் பெறப்போவது புதன்கிழமை தெரிய வரும்.

லேண்டர் வெற்றியானது இந்திய விஞ்ஞானிகளுக்கு மற்றொரு புதிய சாதனையையும் படைக்க உதவியாக இருக்கும். நிலவின் தென் பகுதியில் முதன் முதலில் விண்கலத்தை தரை இறக்கிய நாடு என்ற சிறப்பும் இந்தியாவுக்கு கிடைக்கப் போகிறது.

நிலவின் தென் பகுதியில்தான் அதிகளவு கனிம வளங்கள் உள்ளன. அங்கு லேண்டர் துணையுடன் 14 நாட்கள் நடத்தப்படப் போகும் ஆய்வுகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

Tags:    

Similar News