தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு 1,500 கன அடியாக குறைப்பு

Published On 2022-12-13 14:59 IST   |   Update On 2022-12-13 14:59:00 IST
  • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் தற்போது 22.31 அடிக்கு தண்ணீர் உள்ளது.
  • மீண்டும் கனமழை பெய்தால் மட்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் மீண்டும் அதிகரிக்கப்படும்.

பூந்தமல்லி:

சென்னை மற்றும் புறநகர் நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 22 அடியை தாண்டியது.

இதையடுத்து ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று 3 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனால் அடையாறு ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று பலத்த மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. இன்று காலை நிலவரப்படி முதலில் ஏரிக்கு 3382 கனஅடி தண்ணீர் வந்தது. பின்னர் நீரின் அளவு படிப்படியாக குறைய தொடங்கியது.

இதையடுத்து இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியின் உத்தரவுப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம்24 அடி. இதில் தற்போது 22.31 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3200 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இதே அளவு தண்ணீரை தொடர்ந்து தேக்கி வைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். வரும் நாட்களில் பலத்த மழை இருந்தால் மட்டும் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பலத்த மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பு 1500 கனஅடியாக குறைக்கப்பட்டது. மீண்டும் கனமழை பெய்தால் மட்டும் உபரி நீர் மீண்டும் அதிகரிக்கப்படும்.

கோடைக்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது என்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News