கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
- கொடநாடு வழக்கில் சாட்சியங்களை பதிவுசெய்ய ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
- இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் ஆகியோருக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2019-ல் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவும், வீடியோ வெளியிடவும் தடை விதிக்கும்படியும், ரூ.1.10 கோடி இழப்பீடும் கோரியிருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவுசெய்ய சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக ஜனவரி 30 மற்றும் 31ல் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜராக வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மாஸ்டர் கோர்ட்டில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்களித்ததை எதிர்த்த மேத்யூ சாமுவேலின் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.