தமிழ்நாடு

விளம்பர பலகை வைத்து மாற்று வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டம்...

Published On 2024-06-15 06:55 GMT   |   Update On 2024-06-15 08:20 GMT
  • தினமும் 2 லட்சம் முதல் 2.45 லட்சம் பேர் வரை பயணம் செய்கிறார்கள்.
  • விளம்பரம் செய்யும் உரிமைகளுக்கான ஒப்பந்தத்தை விரைவில் வெளியிடப்படும்

சென்னை:

சென்னையில் தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையும் 2 வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

விரைவான மற்றும் சொகுசு பயணம் என்பதால் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் 2 லட்சம் முதல் 2.45 லட்சம் பேர் வரை பயணம் செய்கிறார்கள்.

இந்த 2 ரெயில் வழித்தடங்களும் சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூர் ரெயில் நிலையங்களை சந்திக்கும் இடங்களாக உள்ளது. சென்ட்ரலில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் பயணிகள் அதிக அளவு வருவதால் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும்.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் வழித்தட தூண்களில் விளம்பர பலகை வைத்து மாற்று வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மெட்ரோ நிறுவனம் கூறியிருப்பதாவது,

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், நிலையான தன்மை மற்றும் மாற்று வருவாய் ஈட்டுதல் (மெட்ரோ இரயில் சேவை வருவாய் கட்டணம் அல்லாத) செயல்பாடுகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக, மீனம்பாக்கம் மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் சின்னமலை மெட்ரோ மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ முதல் கோயம்பேடு மெட்ரோ வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்வதற்கான உரிமைகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னையை சேர்ந்த Mudra Ventures நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் முக்கிய மாற்று வருவாய்களான விளம்பரம், சில்லறை வணிகம் மற்றும் அலுவலக பணி இடங்கள் வழங்குவதன் மூலமாகவும் இயக்க செலவுகளை ஈடு செய்ய மேலும்உதவுகிறது.

மேலும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் விம்கோநகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்யும் உரிமைகளுக்கான ஒப்பந்தத்தை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்கிறது என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News