தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் சிந்தித்து நாளை வாக்களியுங்கள்

Published On 2024-04-18 06:25 GMT   |   Update On 2024-04-18 06:25 GMT
  • வாக்குச்சாவடிகளில் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
  • தனது ஓட்டை யாராவது கள்ள ஓட்டு போட்டு விட்டால் அதுபற்றியும் தலைமை அதிகாரியிடம் முறையிடலாம்.

சென்னை:

தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்த தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிக்கும் இன்று வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் அடையாள மை உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

அதேபோல் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உரிய போலீசாரும், துணை ராணுவ படையினரும் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாக்குச்சாவடிகளில் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அதன் மூலம் இங்கு நடைபெறும் வாக்குப்பதிவுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.

வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அதை சரி செய்வதற்காக 10 வாக்குச்சாவடிக்கு ஒரு மண்டல குழு என்ற வீதத்தில் 6 ஆயிரத்து 137 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் உடனடியாக சென்று பழுது பார்த்து கொடுப்பார்கள். பழுது பார்க்க முடியாத எந்திரங்களாக இருந்தால் புதிய எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

வாக்குப்பதிவின்போது விவிபேட் எந்திரத்தில் தவறான ஓட்டு காண்பிக்கப்படுவதாக இருந்தால், அந்த வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரியிடம் யார் வேண்டுமானாலும் முறையிடலாம். புகாரில் உண்மை இருந்தால் அந்த எந்திரம் மாற்றப்படும்.

புகார் தவறாக இருந்தால் புகார் அளித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

தனது ஓட்டை யாராவது கள்ள ஓட்டு போட்டு விட்டால் அதுபற்றியும் தலைமை அதிகாரியிடம் முறையிடலாம். அவரிடம் ஓட்டளிப்பதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்த பின்னர் வாக்குச்சீட்டில் டெண்டர் ஓட்டு போடலாம். அந்த சீட்டை கவரில் போட்டு தனியாக வைப்பார்கள். ஓட்டு எண்ணிக்கையின்போது வெற்றி தோல்விக்கு ஓரிரு வாக்கு வித்தியாசம் வந்தால் இந்த டெண்டர் ஓட்டு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்களுக்காக சாய்வு தளம் செய்து தரப்பட்டு உள்ளது. அவர்கள் வரிசையில் காத்திருக்க தேவை இல்லை.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டு போடும்போது முதலில் சட்டசபைக்காக விரலில் மை வைக்கப்படும். அடுத்ததாக பாராளுமன்ற ஓட்டுக்காக இன்னொரு விரலில் மை வைக்கப்படும்.

இந்த தேர்தலில் அதிக வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக விழிப்புணர்வு பிரசாரம் நிறைய செய்து உள்ளோம். வாக்காளர்கள் அனைவரும் தங்களது கடமையை நிறைவேற்றும் வகையில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து நாளை வாக்களிக்க வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News