பட்டாச்சார்யா மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
- பட்டாச்சார்யா 2000 முதல் 2011-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளார்.
- புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.
80 வயதாகும் புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்தாண்டு உடல்நல பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்புகள் இருந்ததால் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பினார்.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். தற்போது வயதுமூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புத்ததேவ் பட்டாச்சார்யா 2000 முதல் 2011-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளார்.
இந்நிலையில், பட்டாச்சார்யா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இடதுசாரி இயக்கத்தின் தலைவரும் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
மாநிலத்திற்கும், தேசத்திற்கும் அவரது உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் சேவை என்றென்றும் நினைவுகூரப்படும்.
ஒரு உறுதியான மார்க்சிஸ்ட், அவர் தனது வாழ்க்கையை சமத்துவ சமூகத்தை வளர்ப்பதற்கும், ஒதுக்கப்பட்டவர்களின் காரணத்திற்காகவும், சமூக நீதிக்காக வாதிடுவதற்கும் அர்ப்பணித்தார்.
அவரது சாதனைகள் மற்றும் அவரது இலக்கிய பங்களிப்புகள் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளன.
அவரது தலைமைத்துவமும், மக்களுக்கான அர்ப்பணிப்பும் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிவப்பு வணக்கம், தோழர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.