மழைநீர் வடிகால் பணிகள்- மாவட்ட கலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்
- பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக அரசு தலைமை செயலாளர் வெ.இறையன்பு, அரசு முதன்மை செயலாளர் அமுதாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு, பாத சாரிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
எனவே மழை நீர் வடிகால் பணிகள் மற்றும் வேறு சில வேலைகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களும் மற்றும் குழிகளும் மூடப்படாதிருப்பின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் மற்றும் அடையாள பலகைகள் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் சாலைகளில் மழை நீர் வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மூடி திறந்திருப்பின், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் தடுப்புகள், அடையாள பலகைகள் ஆகியவற்றை மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தொடர்புடைய துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.