தமிழ்நாட்டில் மீண்டும் பரவும் 'சிக்குன் குனியா' காய்ச்சல்
- சாதாரண காய்ச்சல் ஆன்டிபயாடிக் மாத்திரைகளிலேயே சரியாகி விடும்.
- வைரஸ் காய்ச்சல் அசுத்தமான தண்ணீர் அல்லது உணவின் மூலம் பரவும்.
சென்னை:
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக சிக்குன் குனியா காய்ச்சலும் அதிகமாக பரவ தொடங்கி உள்ளது.
டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல் என பல வகை காய்ச்சல் மக்களுக்கு பரவி வந்தாலும் சிக்குன் குனியா காய்ச்சல் வந்தவர்கள் மிகவும் முடங்கி விடுவார்கள்.
காய்ச்சல் வந்தாலே உடல் சோர்வடையும் உடம்பு நெருப்பால் கொதிக்கும் எனவும் சாப்பிட படிக்காது. பசியின்மை அடித்து போட்டது போல் உடம்பு வலி ஏற்படும். காய்ச்சலில் பல வகைகள் இருந்தாலும் சாதாரண காய்ச்சல் ஆன்டிபயாடிக் மாத்திரைகளிலேயே சரியாகி விடும்.
பெரும்பாலான வைரஸ் காய்ச்சல் அசுத்தமான தண்ணீர் அல்லது உணவின் மூலம் பரவும். பொதுவான வைரஸ் காய்ச்சல் ஒரு வாரம் வரை நீடிக்கலாம். இந்த வகை காய்ச்சல் தொண்டையில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். இதற்கு சரியான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் சீக்கிரம் குணப்படுத்தி விடலாம்.
ஆனால் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் என்பது ஏ.டி.எஸ். கொசு கடிப்பதால் வருகிறது.
கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, வயிற்று வலி, தொடர்ச்சியான வாந்தி, உடல் சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
சிலருக்கு உடலில் அரிப்பு, சிவப்பு புள்ளிகள், தோன்றும்.
இந்த காய்ச்சல் தீவிரமாகி விட்டால் உடலின் உட்பகுதியில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். மூட்டு வலியும் அதிகமாகும். ரத்தத்தின் தட்டையணுக்கள் குறைந்து உயிருக்கு ஆபத்தாகி விடும்.
எனவே சிக்குன் குனியா நோய் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் சிக்குன் குனியா காய்ச்சல் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக காணப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 1,451 பேருக்கு சிக்குன் குனியா அறிகுறி இருந்தது. அதில் 331 பேருக்கு சிக்குன் குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு பாதிப்பு இருந்தாலும், பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளதாகவும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.