தமிழகத்தில் மஞ்சள் நிறத்துக்கு மாறும் மாநகர பஸ்கள்- விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பஸ்கள் பச்சை நிறத்தில் மிளிர்ந்தன.
- அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தற்போது இயக்கப்பட்டு வரும் வெண்மை நிற பஸ்களின் நிறமும் மாற்றம் செய்யப்படலாம்.
சென்னை:
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் 8 கோட்டங்களில் பஸ்களை இயக்கி வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகமானது நீண்ட தூர பஸ்களை இயக்கி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பஸ்கள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி வருகின்றன.
மேலும், பெண்களுக்கான இலவச பஸ்களுக்கு அடையாளம் தெரியும் வகையில் முன்னும், பின்னும் பிங் நிறம் அடிக்கப்பட்டு இயங்கி வருகிறது. பொதுவாக தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும்போது பஸ்களின் நிறங்களும் மாற்றப்படுவது இயல்பாகவே நடைபெற்று வந்துள்ளது.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பஸ்கள் பச்சை நிறத்தில் மிளிர்ந்தன. பின்னர் அவை நீலம் மற்றும் சிவப்பு நிறங்களுக்கு மாற்றப்பட்டன. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி வந்த பிறகு தற்போது அரசு மாநகர பஸ்களின் நிறங்கள் மாற்றுவதற்கான திட்டம் தீட்டப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
அந்தவகையில், தற்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்று வரும் நிலையில், அவருக்கு பிடித்தமான மஞ்சள் நிறத்தில் பஸ்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளதோ என்று நினைக்கத் தோன்றும் வகையில் அரசு பஸ்களுக்கு அடர்த்தியான மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்தில் மெரூன் வண்ணத்தில் பட்டை மற்றும் எழுத்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது தமிழக அரசு போக்குவரத்து துறையானது ஆயிரம் புதிய பஸ்களை வாங்க நிதி ஒதுக்கி உள்ளதுடன், மிகவும் பழமையான பஸ்களை புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பஸ்களுக்கு மஞ்சள் நிற பஸ்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 8 கோட்டங்களிலும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தற்போது இயக்கப்பட்டு வரும் வெண்மை நிற பஸ்களின் நிறமும் மாற்றம் செய்யப்படலாம் என அரசு போக்குவரத்துத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.