தமிழ்நாடு

டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த கோவை பெண்- பணம் திருப்பி கேட்டதால் தற்கொலை மிரட்டல்

Published On 2023-03-25 05:10 GMT   |   Update On 2023-03-25 05:10 GMT
  • தொந்தரவு கொடுத்தால் நானும், எனது குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்வோம் என கூறி எனக்கு மிரட்டல் விடுத்தார்.
  • போத்தனூர் போலீசார் பெண் மீது மோசடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

குனியமுத்தூர்:

மும்பை செம்பூரை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 44). இவர் கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நான் மும்பையில்சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு நான் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக கோவைக்கு வந்தேன்.

அப்போது எனது உறவினர் மூலம் கோவை போத்தனூரை சேர்ந்த ஹசல் ஜேம்ஸ் என்ற பெண் அறிமுகமானார். இருவரும் செல்போனை பரிமாறி கொண்டு அடிக்கடி பேசி வந்தோம்.

அப்போது அந்த பெண், தனது கணவர் இறந்துவிட்டார் எனவும், 2 குழந்தைகளை வைத்து கொண்டு தான் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனக்கு நீங்கள் உதவ வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். நானும் அதனை நம்பி அவருக்கு 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.90 ஆயிரம் பணம், துணிமணிகள், காலணிகள், செல்போன், கார் வாங்கி கொடுத்துள்ளேன். இதன் மதிப்பு மொத்தம் ரூ.20 லட்சம் ஆகும்.

இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் இறக்கவில்லை என்பதும், அவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்வதும் எனக்கு தெரியவந்தது. மேலும் பெண்ணுக்கு வேறு சில நபர்களுடன் பழக்கம் இருப்பதை நான் அறிந்தேன்.

இதுகுறித்து நான் அவரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காமல் இருந்தார். தொடர்ந்து வற்புறுத்தி கேட்கவே கணவர் இருப்பதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து நான் அவருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன்.

அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. மாறாக எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தால் நானும், எனது குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்வோம் என கூறி எனக்கு மிரட்டல் விடுத்தார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நான் தற்போது புகார் அளித்துள்ளேன். எனவே அந்த பெண் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தருமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் பெண் மீது மோசடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பெண்ணை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News