தமிழ்நாடு

பொது மக்களின் மனதில் இடம் பிடிப்பதை காவலர்கள் லட்சியமாக கொள்ள வேண்டும்- சைலேந்திரபாபு போலீசாருக்கு கடிதம்

Published On 2023-07-01 08:46 GMT   |   Update On 2023-07-01 08:46 GMT
  • பொதுமக்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன்.
  • நம்மைப்பற்றிய விமர்சனம் பலவரும். இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும்.

சென்னை:

தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு காவல் அதிகாரிகள், மற்றும் போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில் தனது பணிக்காலத் தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளை சுட்டிக் காட்டி இருப்பதுடன் காவலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளார். கடிதத்தில் சைலேந்திரபாபு கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்து பணி நிறைவு பெற்று உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.

இரண்டாண்டு காலம் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம், குற்ற நிகழ்வுகளை தடுத்தோம், நடந்த குற்றங்களைக் கண்டுபிடித்தோம். கண்டுபிடிக்க முடியாத சில வழக்குகளில் இன்னும் தீவிர விசாரணை செய்கிறோம்.

ஆனால், தவறாக ஒருவரை குற்றவாளியாக்கவில்லை. அதுபோல குற்றம் செய்தவர்கள் யாராக இருந் தாலும் அவர்களை விட்டு விடவில்லை.

ரவுடிகள் தொல்லை இல்லை, கூலிப்படைகள் நடமாட்டம் இல்லை என்ற நிலைமையை உருவாக்கினோம். இவை அனைத்தும் உங்கள் முயற்சியால் ஏற்பட்டது. எனவே உங்களுக்கு பாராட்டுகள். உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்.

கடந்த 2 ஆண்டுகளில் 3 லட்சம் இந்திய தண்டனை சட்ட வழக்குகள், 6 லட்சம் சிறு வழக்குகள், 18 லட்சம் இதர மனுக்கள் விசாரிக்கப்பட்டன. மோட்டார் வாகன சட்டத்தில் 5 கோடியே 30 ஆயிரம் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 536 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவை பெரும் பணியாகும்.

பொதுமக்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன். தலைமைப் பண்பு வளர்க்க உடல்நலம், மனநலம் காக்க வேண்டும். தொடர்கல்வி கற்க வேண்டும். ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அளவோடு உணவு உண்ண வேண்டும். காவல்துறையின் 1,34,000 பேரும் ஓர் ஆளுமை என்ற நிலை வரவேண்டும். அப்போது நம் செயல் சிறப்படையும். காவல்துறையின் செயல்பாட்டில் விரும்பத்தக்க மாற்றம் ஏற்படும்.

வதந்திகளைக் கையாண்டது, ரவுடிகளின் கொட்டத்தை அடக்கியது, கூலிப்படையினரை காணாமல் போகச் செய்தது, போதைப் பொருள் நட மாட்டத்தை குறைத்தது, தொழில்நுட்பத்தில் ஏற்படுத்திய புரட்சி போன்ற உங்கள் சாதனைகளைப் பார்த்து நான் வியப்படைகிறேன்.

பொதுமக்கள் நம்மிடம் நிறைய எதிர்ப்பார்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்து, அவர்களின் மனதில் இடம் பிடிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

நம்மைப்பற்றிய விமர்சனம் பலவரும். இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும். ஆனால், நிறைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. இருப்பினும் குற்றச் சாட்டுகளை ஆராய்ந்து பார்த்து, அவற்றின் உண்மைத் தன்மையை கண்டறிந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அதை எடுத்துக்கொண்டு, நாம் சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News