தயாநிதிமாறன் வங்கி கணக்கில் திருடப்பட்ட பணம் திரும்ப வந்தது: குற்றவாளிகள் யார்?
- ஓ.டி.பி. எண்ணை பகிர்ந்து கொள்ளாத நிலையிலும் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
- குற்றவாளிகள் தொடர்பாக விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனும் அவரது மனைவியும் சேர்ந்து கோபாலபுரம் ஆக்சிஸ் வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார்கள். கடந்த 8-ந் தேதி அவரது மனைவிக்கு வங்கியில் இருந்து பேசுவது போல் போன் அழைப்பு சென்று உள்ளது. அந்த இணைப்பை துண்டித்ததும் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.99,999 திருட்டு போனது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உடனடியாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில் ஓ.டி.பி. எண்ணை பகிர்ந்து கொள்ளாத நிலையிலும் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும் 2018-ம் ஆண்டிலேயே ஆதார் தகவல்கள் விற்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது? என்று காட்டமாக தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தயாநிதி மாறன் வங்கிக்கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம் கண்டறியப்பட்டு வங்கிக்கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் தரப்பில் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது.
மேலும் குற்றவாளிகள் தொடர்பாக விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார், குற்றவாளிகள் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளார்கள்.