ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை
- கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி:
திருச்சி முசிறி சொக்கம்பட்டி துறையூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 49). விவசாயியான இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார்.
இவரது பண்ணையில் 200 ஆடுகள் உள்ளன. வழக்கமாக கணவன் மனைவி இருவரும் காலை சமையல் பணிகளை முடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வேளாண் தோட்டங்களுக்கு கொண்டு செல்வார்கள்.
நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு வடிவேல் தனது மனைவியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அங்குள்ள வேளாண் தோட்டத்துக்கு சென்றார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் வடிவேல் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கொள்ளையடிக்கபட்ட நகையின் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும்.
இதுகுறித்து உடனடியாக வடிவேல் தா.பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இதில் 4 பேரின் ரேகைகள் பதிவாகியுள்ளது. மோப்பநாய் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.