தமிழ்நாடு (Tamil Nadu)

தீபாவளி பட்டாசு வெடித்தபோது தமிழகத்தில் 284 இடங்களில் தீவிபத்து

Published On 2022-10-25 08:38 GMT   |   Update On 2022-10-25 08:38 GMT
  • தீபாவளி பண்டிகையால் பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • சென்னையில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் இடைவிடாமல் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று இரவு 12 மணி வரையில் தமிழகம் முழுவதும் 284 இடங்களில் பட்டாசு வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதற்கிடையே பட்டாசு விபத்தில் தமிழகம் முழுவதும் 525 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார். ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 11 பேர் உள் நோயாளிகளாக உள்ளனர். 25 பேர் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 10 பேர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர். 7 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள 36 மருத்துவ கல்லூரிகளில் 345 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 18 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில், தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையால் பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. 2 ஆண்டுகள் பேரிடர் காலம் என்பதால் பாதிப்பு குறைவாக இருந்தது. தீக்காயம் இல்லாத நிலையை ஏற்படுத்துவதே அரசின்நோக்கம், அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சென்னையில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 4 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 10 வயதுக்கு குறைவானவர்கள் ஆவர்.

ஸ்டான்லி மருத்துவமனையில் திருவண்ணாமலை, பண்ருட்டி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்தும் சிகிச்சை பெற்றுள்ளனர். எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் தெலுங்கானாவை சேர்ந்த ஒரு குழந்தையும் சிகிச்சை பெற்றுள்ளது.

ஒருவருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கண்பார்வை பறிபோகும் நிலையில் உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Tags:    

Similar News