தமிழ்நாடு (Tamil Nadu)

தீபாவளி பண்டிகை- விலை உயர்ந்த போதிலும் 3 நாட்களில் ரூ.720 கோடிக்கு மது குடித்த குடிமகன்கள்

Published On 2022-10-25 07:46 GMT   |   Update On 2022-10-25 07:46 GMT
  • தீபாவளி தினமான நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளில் ரூ.255 கோடியே 60 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.
  • பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் குறைந்த ரக மதுபானங்கள் இல்லாததால் சாமான்ய மக்கள் நடுத்தர மதுபானத்தை வாங்கினார்கள்.

சென்னை:

தீபாவளி பண்டிகை காலத்தில் மது விற்பனை பல மடங்கு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி திங்கட்கிழமை வந்ததால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது.

கடந்த காலங்களை விட இந்த ஆண்டு டாஸ்மாக் மது விற்பனை உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு இந்த வருடம் தான் பழைய உற்சாகத்துடன் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.

எல்லா தொழில்களும் ஏற்றம் பெற்று தனிநபர் வருவாய் அதிகரித்து அனைத்து தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெற்றது போல் டாஸ்மாக் மது விற்பனையும் அதிகரித்துள்ளது.

தீபாவளி தினமான நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளில் ரூ.255 கோடியே 60 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது. வழக்கம் போல் மதுரை மண்டலமே மது விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.54.87 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

அடுத்ததாக சேலம் மண்டலத்தில் ரூ.53.21 கோடியும், 3-வது இடத்தில் திருச்சி 52.30 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்துள்ளன. சென்னை மண்டலத்தில் ரூ.48.80 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.46.42 கோடியும் மது விற்பனை நடந்துள்ளது.

23-ந்தேதி (ஞாயிற்று கிழமை) ரூ.258.79 கோடிக்கும், 22-ந்தேதி (சனிக்கிழமை) ரூ.205.42 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளன. 3 நாட்களின் மொத்த விற்பனை ரூ.719 கோடியே 81 லட்சத்திற்கு மேல் நடந்துள்ளன.

மதுபானங்கள் விலை உயர்ந்த போதிலும் மக்கள் பண்டிகையையொட்டி அதிகளவு மதுவை பயன்படுத்தி உள்ளனர். உயர் ரக மற்றும் நடுத்தர ரக மதுபானங்கள் அதிகளவில் இந்த பண்டிகை காலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் குறைந்த ரக மதுபானங்கள் இல்லாததால் சாமான்ய மக்கள் நடுத்தர மதுபானத்தை வாங்கினார்கள். இதுவே மதுபான விற்பனை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை விட இந்த வருடம் விற்பனை சுமார் 50 கோடிக்கு மேல் அதிகரித்து புதிய சாதனை படைத்துள்ளது.

Tags:    

Similar News