காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது: துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
- மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் காலையில் புயல் உருவாக வாய்ப்பு
- புயல் சின்னம் காரணமாக 26ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
சென்னை:
அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது வடமேற்கு அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 23ம் தேதி (நாளை) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 24ம் தேதி (நாளை மறுநாள்) காலையில் புயலாக வலுப்பெறக்கூடும், அதன்பின்னர் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து 25ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக 26ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.