தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் நீக்கப்பட்டதற்கு என்ன நடவடிக்கை?- துணை முதலமைச்சர் கேள்வி

Published On 2024-10-19 06:02 GMT   |   Update On 2024-10-19 06:02 GMT
  • ஏற்கனவே மன்னிப்பு கேட்டதாக செய்தியில் பார்த்தேன்.
  • தற்போது தெரிந்தோ தெரியாமலோ தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் ரூ.36 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் 22 பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை திருவண்ணாமலைக்கு வந்தார்.

அப்போது அவரிடம், கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறுதலாக பாடப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

இதுகுறித்து ஏற்கனவே மன்னிப்பு கேட்டதாக செய்தியில் பார்த்தேன். இதனை பெரிதுபடுத்த விரும்பவில்லை. மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி சில சமுதாய மக்களின் மனம் வருந்தக்கூடாது என்ப தற்காக பல வரிகளை நீக்கினார்.

தற்போது தெரிந்தோ தெரியாமலோ தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகம் எதிரே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று காலை நடந்தது.

இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் தப்பாட்டம், கரகாட்டம், நாதஸ்வரம் ஆகியவை கொண்டு வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1,835 வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News