பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் விலை முன்னறிவிப்பின்றி திடீர் உயர்வு- பக்தர்கள் அதிர்ச்சி
- கோவில் நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தத்தின் விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
- பக்தர்கள் அனைவரும் தவறாமல் வாங்கிச் செல்லும் பிரசாதமாக பஞ்சாமிர்தம் உள்ளது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சாதாரண நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவு வந்து செல்லும் நிலையில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.
இவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவச பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேவஸ்தான ஸ்டால்களில் விற்பனையாகும் பஞ்சாமிர்தத்தை தங்கள் வீடுகளுக்கு வாங்கி செல்வார்கள்.
கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேவஸ்தானம் மட்டுமின்றி பழனி பஸ் நிலையம், அடிவாரம், மின் இழுவை ரெயில் நிலையம், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் போன்ற பல்வேறு இடங்களிலும் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு ½ கிலோ எடையில் டப்பா, டின் என 2 வகைகளில் பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. டப்பாக்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ.35க்கும், டின்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தத்தின் விலையை ஒரு டப்பாவுக்கு ரூ.5 விலை உயர்த்தி கோவில் நிர்வாகம் விற்பனை செய்தது.
டின் பஞ்சாமிர்தம் ரூ.40ல் இருந்து ரூ.45க்கும், டப்பா பஞ்சாமிர்தம் ரூ.35ல் இருந்து ரூ.40க்கும் விலை உயர்த்தி விற்கப்பட்டது. புதிய விலையை பேனாவால் மாற்றி விற்பனை நிலையங்களில் வைத்திருந்தனர். இதனால் பக்தர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து வி.எச்.பி. மாநில அமைப்பாளர் செந்தில் தெரிவிக்கையில், தமிழகத்திலேயே அதிக வருவாய் கொண்ட கோவிலாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் தவறாமல் வாங்கிச் செல்லும் பிரசாதமாக பஞ்சாமிர்தம் உள்ளது. அதனால்தான் மத்திய அரசு பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. ஆனால் கோவில் நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தத்தின் விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
கோவிலுக்கு வருவாய் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை. ஆனால் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தின் விலையை எதற்காக உயர்த்த வேண்டும். நெய் மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துவிட்டதால் பஞ்சாமிர்தம் விலையை உயர்த்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
பழனிச்சாமி : பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்கி அதனை தங்கள் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு வழங்குவது வழக்கம். அவ்வாறு ஒருவர் 50 முதல் 100 டப்பாக்கள் வரை கூட வாங்கிச் செல்வார்கள். குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்து வரும் பக்தர்கள் இது போன்ற கூடுதல் பஞ்சாமிர்தங்களை வாங்கிச் செல்ல முடியாது. வணிக நிறுவனங்கள் போல லாப நோக்கில் தேவஸ்தான பிரசாதங்களை விற்கக்கூடாது. இதில் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை மூலம் தயார் செய்யப்படுவது. திருப்பதியில் இலவச லட்டு வழங்கப்படுகிறது. அதன் பிறகு பக்தர்களுக்கு தேவைப்பட்டால் விலை கொடுத்து லட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் அங்கு கூட விலை ஏற்றப்படவில்லை. அதே போல பழனி கோவில் பஞ்சாமிர்தத்தையும் பழைய விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என்றார்.