சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்காமல் திரும்பிய சென்னை பக்தர்கள்
- பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
- ஏமாற்றத்துடனும், மிகுந்த மனவருத்தத்துடனும் பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:
சர்வதேச ஆன்மீக தலமான சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கு ஆண்டுதோறும் தமிழகம் , கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய முடியாமல் திரும்பி வரும் நிலை ஏற்பட்டது. அதேபோல் சென்னை அசோக் நகரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 40 பேர் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
கூட்ட நெரிசல் காரணமாக அவர்கள் வந்த குழுவில் பலர் இடமாறி சென்றுவிட்டனர். பலமணிநேரம் கழித்து ஒருவரையொருவர் தேடிபிடித்து கண்டுபிடித்த நிலையில் பெரும்பாலான பக்தர்கள் சாமிதரிசனம் செய்யவில்லை என தெரியவந்தது. மீண்டும் வரிசையில் வந்து சாமி தரிசனம் செய்வது இயலாத காரியம் என்பதால் அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவி புண்ணிய தலமாக விளங்குவதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு நீராடி பின்னர் தங்கள் யாத்திரையை தொடங்குவது வழக்கம். சுருளி மலைப்பகுதியில் ஐயப்பன்கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சபரிமலையில் செய்யப்படும் கலசபூஜை, படிபூஜை, புஷ்பாபிஷேகம், மண்டலஅபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.
இதனை அறிந்து சென்னையில் இருந்து சாமி தரிசனம் செய்யமுடியாமல் திரும்பிய ஐயப்ப பக்தர்கள் சுருளியில் உள்ள ஐயப்பன்கோவிலில் நெய்தேங்காயை உடைத்து ஐயப்பனுக்கு அபிஷகேம் செய்து வழிபாடு செய்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த 16 ஆண்டுகளாக நாங்கள் சபரிமலைக்கு யாத்திரை வருகிறோம். ஆனால் இந்த ஆண்டுபோல எப்போதும் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பியதே கிடையாது. எங்களை போன்றே பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்யமுடியவில்லை.
இதனால் ஏமாற்றத்துடனும், மிகுந்த மனவருத்தத்துடனும் பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டள்ளது. போலீசாரின் கெடுபிடியால் 18-ம் படியை கூட தொட முடியவில்லை. ஆன்லைன் முன்பதிவு என்ற பெயரில் பக்தர்கள் தடுக்கப்படுகின்றனர். கடந்த காலங்களில் இருந்தது போலவே சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கவேண்டும். 2 நாள் தங்கிஇருந்துகூட ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் முடிவுசெய்வார்கள். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.