அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை: தலைமை செயலாளர்
- வேலை இல்லை ஊதியம் இல்லை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஊதியம் அவர்களுக்கு உரிமை இல்லை.
- அரசு ஊழியர்கள் எவரேனும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் இல்லாத காலமாக கருதப்படும்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வருகிற 26-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நேற்று தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அமைச்சர் எ.வ. வேலு அலுவலகத்தில் நேற்று மதியம் அரசு சார்பில் ஜாக்டோ ஜியோ அமைப்பு உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் 26-ந்தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில், அடையாள வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனைத்து துறை செயலாளர்களுக்கும் அவர் எழுதியுள்ள அவசர கடிதத்தில் "அனைத்து துறையின் அரசு ஊழியர்கள் விதிகளை மீறக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் எவரேனும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் இல்லாத காலமாக கருதப்படும்.
வேலை இல்லை ஊதியம் இல்லை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஊதியம் மற்றும் படிகளுக்கு அவர்களுக்கு உரிமை இல்லை. பகுதி நேர பணியாளர்கள், தினசரி ஊதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியத்தில் இருப்பவர்கள் சேவையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
நடத்தை விதிகள் 1973-ஐ யாரும் மீறவில்லை என்பதை உறுதி செய்வதோடு பணியில் இல்லாத காரணத்திற்காக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சாதாரண விடுப்பு, மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புக்கான விண்ணப்பம் வேலை நிறுத்த நாளில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஊழியர்களின் வருகை நிலை குறித்த அறிக்கையை 15-ம்தேதி காலை 10.15 மணிக்குள் மனித வள மேலாண்மை துறைக்கு தெரிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.