வருசநாடு மலைப்பகுதியில் பெருங்கற்கால கல்வட்டம், நெடுங்கற்கள் கண்டுபிடிப்பு
- பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.
- நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.
வருசநாடு:
தேனி மாவட்டம் குமணன் தொழு அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை தொல்லியல் ஆய்வாளரும், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியருமான, செல்வம் கள ஆய்வின்போது கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
வருசநாடு குமணன்தொழு அருகில் அருவா தீட்டுப்பாறை பகுதியில், மொக்கை என்பவரின் காட்டில் 3000 ஆண்டுகள் பழமையான 20க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் மற்றும் 5 க்கும் மேற்பட்ட நெடுங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பல கல்வட்டங்களும் நெடுங்கற்களும் சிதைக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் கல்வட்டங்கள் 13 அடி விட்டம் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.
பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.
குமணன் தொழுவிலிருந்து வெள்ளையம்மாள்புரம், சின்னமனூருக்கு கால்நடையாக செல்வதற்கு பழமையான பாதை ஒன்று இவ்வழியாக செல்கிறது. வழி நெடுகிலும் தீட்டுக்கற்கள் காணப்படுவதால் இப்பகுதி அருவா தீட்டுக் கணவாய் என இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.
பெருங்கற்காலம் தொட்டு தற்காலம் வரை தீட்டுக்கற்களில் அருவா உள்ளிட்ட ஆயுதங்களைத் தீட்டும் வழக்கம் இப்பகுதி மக்களிடையே தொடர்ந்து வருவது வியப்புக்குரியது.
வருசநாட்டுப் பகுதியில் பெருங்கற்காலத்தில் அடர்த்தியாக மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றாக இந்த நினைவுச் சின்னங்கள் உள்ளன.