தமிழ்நாடு

கோவில் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை- டி.எஸ்.பி., காலில் விழுந்து கதறி அழுத பக்தர்

Published On 2024-10-06 08:53 GMT   |   Update On 2024-10-06 08:53 GMT
  • அனைவரும் ஒன்றிணைந்து பஜனை கோவில் விழாவை நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
  • நீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்ய உள்ளதாக அண்ணாதுரை தெரிவித்தார்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பெரமியம் கிராமத்தில் பஜனை கோவில் உள்ளது. இங்கு ராமர் உருவ படம் வைத்து குறிப்பிட்ட ஒரு பிரிவினர் பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பிரிவை சேர்ந்த அண்ணாதுரை உட்பட 25 குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்தும், பஜனை கோவில் விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என கடும் கட்டுப்பாடுகளை ஒரு தரப்பினர் விதித்தனர்.

இதையடுத்து 25 குடும்பத்தை சேர்ந்தோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாரர் அண்ணாதுரை மூலம் மனு தாக்கல் செய்தனர். எதிர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரு பிரிவுகளாக செயல்படாமல் ஒரே பிரிவாக செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பஜனை கோவில் விழாவை நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

ஆனால் மற்றொரு தரப்பினர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் தங்களுக்கென ஒரு தேதியை தேர்ந்தெடுத்து அதில் விழா கொண்டாட தொடங்கினர். இந்தநிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் திரவியம் மற்றும் போலீஸ் டி.எஸ்.பி., தினேஷ்குமார் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவின்படி கிராம விழாவை இருதரப்பும் இணைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாதுரை தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் காவல்துறை அதிகாரி ஒருவரும் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சிலரும் , நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மற்றொரு தரப்பிற்கு சாதகமாக செயல்படுவதாக கூறியும், நீதிமன்ற உத்தரவை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தும் டி.எஸ்.பி., தினேஷ் குமாரின் காலில் விழுந்து அண்ணாதுரை கதறி அழுதார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவரை தூக்கிவிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்ய உள்ளதாக அண்ணாதுரை தெரிவித்தார்.

Tags:    

Similar News