தமிழ்நாடு

தீபாவளி முன்பதிவு முடிந்தது- தென்மாவட்ட ரெயில்களில் 5 நிமிடத்தில் இடங்கள் நிரம்பின

Published On 2023-07-14 07:11 GMT   |   Update On 2023-07-14 07:11 GMT
  • தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முன் உள்ள 3 நாட்களுக்கு நேற்று வரை முன்பதிவு செய்தனர்.
  • கடந்த 3 நாட்களைவிட இன்று முன்பதிவு செய்ய கூட்டம் அதிகமாக இருந்தது.

சென்னை:

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 12-ந் தேதி வருகிறது. பண்டிகை வருவதற்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கின்ற நிலையில் சொந்த ஊரில் சென்று பண்டிகையை கொண்டாட மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

கூட்ட நெரிசல் இல்லாமல் ரெயிலில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய பயணத்தை திட்டமிட்டுள்ளனர். அதன்படி தீபாவளி ரெயில் முன்பதிவு கடந்த 12-ந்தேதி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முன் உள்ள 3 நாட்களுக்கு நேற்று வரை முன்பதிவு செய்தனர். பெரும்பாலானவர்கள் ஆன்லைன் வழியாக வீடுகளில் இருந்தவாறு முன்பதிவு செய்ததால் கவுண்டர்களில் கூட்டம் இல்லை.

ஆனாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் வெளியூர் மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்தனர். குடும்பமாக செல்பவர்கள் 2 நாட்களுக்கு முன்பே பயணத்தை திட்டமிட்டு டிக்கெட் எடுத்துள்ளனர். எழும்பூரில் இருந்து செல்லும் கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, ராமேஸ்வரம், திருச்சி, திருவனந்தபுரம், மதுரை உள்ளிட்ட முக்கிய ரெயில்களில் உள்ள 2-ம் வகுப்பு படுக்கை வசதிகள் நிரம்பி விட்டன.

தீபாவளிக்கு முந்தைய நாள் நவம்பர் 11-ந்தேதி பயணம் செய்ய இன்று காலை 8 மணிக்கு முன் பதிவு தொடங்கியது. கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ளக்கூடியவர்கள் இன்று உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பெறுவதில் தீவிரமாக இருந்தனர்.

அதிகாலை 5 மணிக்கே எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் காத்து நின்றனர். அவர்களுக்கு போலீசாரால் டோக்கன் வழங்கப்பட்டது. 8 மணிக்கு கவுண்டர் திறந்தவுடன் வரிசையில் முதலில் நின்ற ஒருவருக்கே உறுதியான டிக்கெட் கிடைத்தது. அடுத்து வந்தவர்களுக்கு ஆர்.ஏ.சி., காத்திருப்போர் பட்டியல் வரத்தொடங்கியது.

ஆனாலும் பலர் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் காத்திருப்போர் பட்டியல் நீடித்த போதிலும் டிக்கெட் வாங்கி சென்றனர்.

கடந்த 3 நாட்களைவிட இன்று முன்பதிவு செய்ய கூட்டம் அதிகமாக இருந்தது. 5 நிமிடத்தில் முக்கிய ரெயில்களில் உள்ள 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பிவிட்டன.

ஆன்லைன் வழியாக பலரும் முன்பதிவு செய்ததால் இடங்கள் உடனே நிரம்பி விட்டன. கோவை, ஈரோடு, சேலம் மார்க்கத்திலும் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பகல் நேர ரெயில்களில் மட்டுமே இடங்கள் தற்போது காலியாக இருக்கின்றன. ஏ.சி. வகுப்பு இடங்களும் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை.

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.

தீபாவளிக்கு இன்னும் 120 நாட்கள் இருப்பதால் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது டிக்கெட் உறுதியாகும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். இன்று மாலைக்குள் காத்திருப்போர் பட்டியல் ரூ.200 தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News