அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை திமுக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது- சசிகலா
- ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்தார்.
- வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரிய வரும்.
பவானி:
ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக சசிகலா நேற்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
பவானி அந்தியூர்-மேட்டூர் பிரிவு ரோட்டில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சசிகலா பிரச்சார வேனில் அமர்ந்தபடி பேசினார்.
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்சியை தொடங்கி ஆட்சி அமைத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அதில் குறிப்பிடத்தக்கதாக சத்துணவு திட்டமாகும். அதன் பின்னர் ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்தார்.
2 ஆண்டுகளை கடந்த தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தி விட்டு வருகிறது. மகளிருக்கு பஸ்சில் பயணம் செய்யும் போது இலவசம் எனக்கூறி விட்டு அதில் பயணிக்கும் உங்களை பார்த்து ஓசியில் பயணம் செய்கிறீர்களே என ஒரு அமைச்சர் பேசுகிறார்.
அதே போல் தேர்தல் வாக்குறுதியின் போது பெண்களுக்கு உரிமை தொகை ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்து விட்டு தற்போது அந்த திட்டத்தில் பல்வேறு தடைகள் போடப்பட்டு உள்ளது.
மின்சார கட்டணம் உயர்வு காரணமாக தற்போது ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்து வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து முதலீட்டாளர்களை கொண்டு வந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குகிறார்கள் என்பது எத்தனை சாத்தியம் என்பதை பொது மக்கள் நீங்கள் தான் நினைத்து பார்க்க வேண்டும்.
அதேபோல் வேளாண்மை துறைக்காக முதன் முதலில் தனியாக பட்ஜெட் போட்ட தி.மு.க. அரசு இன்று தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது.
வேளாண்மை துறை முன்கூட்டியே தயார் நிலையில் இதற்கான ஆலோசனை செய்திருந்தால் தக்காளி, வெங்காயம் விலையை கட்டுப்படுத்தி இருக்கலாம்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரிய வரும். அதுவரை தமிழக மக்களை தி.மு.க.வினரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
தற்போது தமிழ்நாட்டில் வருவாய்த்துறையினர் மூலம் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளர். அதேபோல் சாலை வரி 5 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளதால் பொது மக்கள் மேலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 200 டி.எம்சி. தண்ணீரை பெற்று தர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.