தமிழ்நாடு

டிரைவர் பிரதாப் - முக ஸ்டாலின்

அரசு பஸ்சில் மின்சாரம் தாக்கி டிரைவர் பலி- முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

Published On 2024-08-17 05:06 GMT   |   Update On 2024-08-17 05:12 GMT
  • பயணிகளும், கண்டக்டரும் பின்வாசல் வழியாக பதறியடித்து கொண்டு கீழே இறங்கினர்.
  • டிரைவர் பிரதாப் பஸ்சில் இருந்து இறங்க முயன்றார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தூனேரி அவ்வூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 44). அரசு பஸ் டிரைவராக கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சிந்து மேனகா (34). இவர்களுக்கு அபிஷேக் (12), ரித்திக் (9) என 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு பிரதாப் கோத்தகிரியில் இருந்து கூட்டாடா கிராமத்திற்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். அங்கு பயணிகளை இறக்கி விட்டு, பஸ்சை நிறுத்தினார். பின்னர் நேற்று காலை 6.30 மணியளவில் கூட்டாடாவில் இருந்து பஸ்சை கோத்தகிரி நோக்கி இயக்கி வந்தார்.

கோவில்மட்டம் பகுதிக்கு பஸ் சென்று கொண்டிருந்தபோது, தொடர் மழையால் சாலையில் மின் கம்பி அறுந்து கிடப்பதை கண்டு பிரதாப் பஸ்சை நிறுத்தினார். அங்கு பயணிகளை உடனடியாக கீழே இறங்குமாறு கூறினார். இதைத்தொடர்ந்து பயணிகளும், கண்டக்டரும் பின்வாசல் வழியாக பதறியடித்து கொண்டு கீழே இறங்கினர்.

இதையடுத்து டிரைவர் பிரதாப்பும் பஸ்சில் இருந்து இறங்க முயன்றார். தனது இருக்கை அருகே உள்ள கதவை திறந்து கொண்டு பஸ்சில் இருந்து வெளியே வந்தார். அந்த சமயத்தில் அறுந்து கிடந்த மின் கம்பி பஸ்சின் மீது உரசியது. அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் பிரதாப் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த டிரைவர் அரசு பஸ் டிரைவர் பிரதாப்பின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரண நிதி அறிவித்து உள்ளார்.

Tags:    

Similar News