டிரைவர் கொலையில் முக்கிய தடயம் சிக்கியது: 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
- காரின் உரிமையாளர் தச்சநல்லூர் அருகே உள்ள மேலக்கரை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது.
- மேலக்கரை, மேலப்பாளையம், பாளை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 வாலிபர்கள் மீது போலீசார் சந்தேகம் அடைந்து அவர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் விக்கிரமாதித்தன். இவரது மகன் வீரபுத்திரன்(வயது 28). லோடு ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று இரவு அங்குள்ள பயணிகள் நிழற்குடையில் நண்பர்களுடன் பேசிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் வீரபுத்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு காரில் தப்பிச்சென்றது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் செயல்படும் தனிப்படை உள்பட மொத்தம் 5 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீரபுத்திரனை கொன்ற கும்பல் காரில் வந்து சென்றுள்ளதால் நெல்லை-அம்பை நெடுஞ்சாலையில் முன்னீர்பள்ளம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் அந்த கும்பல் வெள்ளை நிற காரில் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அந்த காரின் பதிவெண் கேமராவில் பதிவாகி உள்ளதால் அந்த எண்ணை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
அந்த காரின் உரிமையாளர் தச்சநல்லூர் அருகே உள்ள மேலக்கரை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது. அந்த வாலிபரை வீட்டுக்கு தேடி சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதனால் அவர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் மேலக்கரை, மேலப்பாளையம், பாளை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 வாலிபர்கள் மீது போலீசார் சந்தேகம் அடைந்து அவர்களை தேடி வருகின்றனர்.
அவர்களை பிடித்து விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.