தமிழ்நாடு

காற்று பலமாக வீசியதால் உடைந்த பஸ் கண்ணாடி- படுகாயங்களுடன் சாதுர்யமாக ஓட்டி பயணிகளின் உயிரை காப்பாற்றிய டிரைவர்

Published On 2024-10-10 09:12 GMT   |   Update On 2024-10-10 09:12 GMT
  • திருப்பூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது.
  • டிரைவர் சுரேந்திரன் ரத்தக்காயத்துடன் பஸ்சை இயக்கி, பயணிகளை காப்பாற்றிய காட்சிகளும் பதிவாகி இருந்தது.

திருப்பூர்:

கோவை - திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. தொண்டாமுத்தூரை சேர்ந்த டிரைவர் சுரேந்திரன் (வயது 32) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

திருப்பூர் அவிநாசி பைபாஸ் சாலையில் செல்லும் போது, காற்று பலமாக வீசியதால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. டிரைவர் சுரேந்திரன் மீது கண்ணாடி துண்டுகள் பட்டு தலை, கை மற்றும் கால் போன்ற பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.

சுதாரித்துக்கொண்ட சுரேந்திரன், பயணிகளின் உயிரை பாதுகாக்க தனக்கு ஏற்பட்ட படுகாயங்களை பொருட்படுத்தாமல் பஸ்சை லாவகமாக இயக்கி சாலையோரம் நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றினார். இதையடுத்து அவரை பாராட்டிய பயணிகள், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில் பஸ்சில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் கண்ணாடிகள் நொறுங்கி விழும் காட்சிகளும், டிரைவர் சுரேந்திரன் ரத்தக்காயத்துடன் பஸ்சை இயக்கி, பயணிகளை காப்பாற்றிய காட்சிகளும் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News