தருமபுரியில் குடிபோதையில் போலீஸ்காரரை தாக்கியவர் கைது
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீஸ்காரர் தங்கமணியை மோதி விடுவது போல அவர் அருகில் வந்துள்ளார்.
- மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் போதையில் வந்து தகாத வார்த்தைகள் பேசி போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
தருமபுரி:
தருமபுரி போக்குவரத்து காவல் பிரிவில் முதல்நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் தங்கமணி. இவர் சம்பவத்தன்று மாலை 4 மணி அளவில் தருமபுரி ரெயில்வே நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீஸ்காரர் தங்கமணியை மோதி விடுவது போல அவர் அருகில் வந்துள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி, பார்த்து செல்லுமாறு தங்கமணி அறிவுறுத்தியுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளில் திட்டி போலீஸ்காரரை தாக்கியுள்ளார். இதில் தங்கமணிக்கு லேசான காயம் ஏற்பட்டு சீருடை கிழிந்தது. இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தருமபுரி டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை அருகேயுள்ள எ.ஜெட்டிஅள்ளியை சேர்ந்த பழனியப்பன் மகன் முனியப்பன் (வயது40) என்பதும், இவர் சென்டரிங் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் போதையில் வந்து தகாத வார்த்தைகள் பேசி போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்து முனியப்பன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.