சேலத்தில் குடிபோதையில் ஓட்டலில் ரகளை செய்த போலீசார்
- ஓட்டலுக்கு போதையில் சாப்பிட வந்தவர்கள் போலீசார் என்று தெரியவந்தது.
- தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓட்டலில் மயங்கியவரை ஒருவழியாக எழுப்பினர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு ரவுண்டானா பகுதியில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது.
சம்பவத்தன்று இரவு காரில் குடிபோதையில் 2 பேர் இந்த ஓட்டலுக்கு சாப்பிட வந்தனர். பின்னர் சாப்பிட்டு விட்டு ஒருவர் ஓட்டலில் இருந்த மேஜை மீது தலைவைத்து போதையில் மயங்கிவிட்டார். மற்றொருவர் அவர்கள் வந்த காரிலேயே தூங்கிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே ஓட்டலுக்கு போதையில் சாப்பிட வந்தவர்கள் போலீசார் என்று தெரியவந்தது.
தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓட்டலில் மயங்கியவரை ஒருவழியாக எழுப்பினர். ஆனாலும் அவர் ஓட்டலில் இருந்து புறப்படாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். பின்னர் அவரை அங்கிருந்து கிளம்பிசெல்லுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர் நாங்கள் இங்கேயேதான் நிற்போம், எங்கு வேண்டுமானாலும் தூங்குவோம், என்ன பண்ணுவ என்று அநாகரீகமாக நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவங்களை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த வீடியோவில் இருந்த போலீசார் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் சேலம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி, தலைமைக் காவலர் செந்தில்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் 2 பேர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.