வரத்து குறைந்ததால் குமரி மாவட்டத்தில் பூண்டு விலை ரூ.450 ஆக உயர்வு
- வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழகத்தில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- இன்னும் 15 நாட்களுக்கு பூண்டு விலை குறையாது.
நாகர்கோவில்:
தமிழ்நாட்டில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாலும், அளவில் சற்று பெரியது என்பதாலும் இல்லத்தரசிகள் அதிகம் விரும்புவார்கள்.
இதுபோக, தமிழகத்தின் தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழகத்தில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. உற்பத்தி குறைந்த தால், அதன் விலையும் கிலோவுக்கு ரூ.150 அதிகரித்து, ரூ.350 வரை விற்பனை செய்யப் பட்டது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்தும் குறைந்துள்ளதால், அதன் விலை மேலும் அதிக ரித்துள்ளது. அந்த வகையில் நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ பூண்டு ரூ.420 வரை விற்பனை செய்யப்பட்டது. அதாவது சிறிய பூண்டு கிலோ ரூ.250-க்கும், நடுத்தர பூண்டு கிலோ ரூ.350-க்கும், பெரிய பூண்டு கிலோ ரூ.420-க்கும் விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதே சமயம் நாகர்கோவிலில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்னும் 15 நாட்களுக்கு பூண்டு விலை குறையாது என்றும், அதன்பிறகு புதுப்பூண்டு வெளி மாநிலங்களில் இருந்து வர தொடங்கியதும் அதன் விலை குறையதட தொடங்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல சீரகம் ரூ.480, மல்லி-ரூ.99, மிளகு ரூ.660, கடலை பருப்பு ரூ.72 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காய்கறி வரத்து சீராக இருப்பதால் காய்கறிகள் விலை கூடவோ குறையவோ இல்லை.