தமிழ்நாடு

அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரிக்கு டிசம்பர் 28 வரை நீதிமன்ற காவல்

Published On 2023-12-14 14:23 GMT   |   Update On 2023-12-14 14:36 GMT
  • லஞ்ச ஒழிப்புத்துறையினரின் பெரும்பாலான கேள்விகளுக்கு அங்கிட் திவாரி தெரியாது என பதிலளித்தார்.
  • அங்கிட் திவாரியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டாக இருப்பவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரியான அங்கிட் திவாரி டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசினார். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருப்பதாகவும், இதிலிருந்து தப்பிக்க ரூ.51 லட்சம் பணம் தரவேண்டுமென கேட்டுள்ளார்.

அதன்படி கடந்த 1-ம் தேதி திண்டுக்கல்லில் ரூ.20 லட்சம் லஞ்ச பணத்தை வாங்கியபோது போலீசார் அங்கிட் திவாரியை கையும், களவுமாக பிடித்து கைதுசெய்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் மனுவை ஏற்றுக்கொண்டு அங்கிட் திவாரியை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

அதன்படி, நேற்று முன்தினம் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து அங்கிட் திவாரியிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். மதுரையில் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது 2 லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டது. அந்த லேப்டாப்களை அங்கிட் திவாரியை வைத்து திறக்கச் செய்தனர். அதில் அமலாக்கத்துறை சோதனையின் போது யார் யாரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்கள் இருந்தன.

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் பெரும்பாலான கேள்விகளுக்கு அங்கிட் திவாரி தனக்கு தெரியாது என்று பதிலளித்ததுடன், சில கேள்விகளுக்கு மவுனமாக இருந்துள்ளார். இருந்தபோதும் அமலாக்கத் துறையை காரணம் காட்டி பல்வேறு நபர்களிடம் அங்கிட் திவாரி லஞ்சம் வாங்கி அதை தனது துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கியது தெரிந்திருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் அங்கிட் திவாரி மதுரையில் பணிக்குச் சேர்ந்துள்ளார். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் 3 நாள் காவல் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு அங்கிட் திவாரியை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கிட் திவாரியின் 15 நாள் காவல் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கிட் திவாரி சார்பில் ஆஜரான வக்கீல்கள் சிறையில் அவருக்கு முதல் வகுப்பு அனுமதி வழங்கக்கோரி மனுதாக்கல் செய்தனர்.

அவர் மதுரை சிறையில் சாதாரண கைதிகளை போல அடைக்கப்பட்டிருப்பதாகவும், வருமான வரியை கட்டி வருபவர் என்பதால் அவருக்கு முதல் வகுப்பு அனுமதி வழங்க கேட்டு மனு அளித்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அங்கிட் திவாரி தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்தார். அரசுத்தரப்பு சார்பில் ஆஜரான வக்கீல்கள் இந்த வழக்கில் குற்றவியல் வக்கீல் ஆஜராக வேண்டியிருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அங்கித் திவாரி திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கிட் திவாரியை டிசம்பர் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 28-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது.

Tags:    

Similar News