தமிழ்நாடு

காஞ்சிபுரம் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published On 2024-06-17 12:44 GMT   |   Update On 2024-06-17 12:44 GMT
  • பெண் காவலர் பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய கணவர்.
  • பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றும், பெண் காவலர் டில் ராணிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் காவலர் பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு அவரது கணவர் தப்பியுள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக, பெண் காவலர் டில்லி ராணியை அவரது கணவர் மேகநாதன் தான் வெட்டியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் டில்லி ராணி என்பவர் பட்டப்பகலில் சீருடையில் இருந்தபோதே அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

தனிப்பட்ட விரோதத்தால் கணவரே வெட்டியுள்ளதாக செய்திகள் வந்தாலும், உண்மைக் காரணம் என்னவென்பதை காவல்துறை தீர விசாரித்து தொடர்புள்ளோரை உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காரணம் எதுவாக இருப்பினும், சீருடையில் உள்ள ஒரு காவலரே பட்டப்பகலில் அரிவாளால் தாக்கப்படுவது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் புதிய உச்சம். இதற்கு காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகச் சொல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

தான் சிறப்பாக சட்டம் ஒழுங்கை காத்து வருவதாக கூறி வரும் விடியா திமுக அரசின் முதல்வர், இனியாவது அந்த மாய உலகிலிருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக்காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News