ஆன்லைன் சிறப்பு வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை- கல்வித்துறை எச்சரிக்கை
- ஒரு சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன.
- விதிமுறையை மீறி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
சென்னை:
அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை கடந்த மாதம் 28-ந் தேதி முதல் விடப்பட்டது. வருகிற 7-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காலாண்டு விடுமுறை 9 நாட்கள் கிடைத்ததால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன.
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது, மீறினால் அந்த பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னை தாம்பரம், மேடவாக்கம், நாமக்கல், ராசிபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தி வருவதாகவும் இதில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என வற்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
தனியார் பள்ளிகளின் இந்த நடவடிக்கை பெற்றோர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சிறப்பு பாட வேளை குறித்த அட்டவணையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதுபற்றி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, கல்வித் துறையின் எச்சரிக்கையை மதிக்காமல் சில தனியார் பள்ளிகள் இணைய வழியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் வந்தால், விதிமுறையை மீறி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.