93 கூடுதல் பணியிடங்களுக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல்- தமிழக தேர்தல் அதிகாரி தகவல்
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும்.
- தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிக்காக 93 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்தலுக்காக மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர், தாசில்தார், துணை தாசில்தார், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் என 93 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் இளநிலை உதவியாளர் டைப்பிஸ்டு, எழுத்தர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு அரசின் வழக்கமான ஊதியத்தை வழங்கலாம் என்று தேர்தல் துறை அனுமதித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:-
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசின் தேர்தல் துறையில் பணியாற்ற கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்தலின்போது பல் வேறு வகையான பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டி உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தேர்தல் பணி அலுவலர்களுக்கும் பணிச்சுமை அதிகமாகும். அதிலும் வாக்குப்பதிவு முடிவடைந்து ஓட்டு எண்ணி முடிக்கப்படும் வரை வேலைகள் மிக அதிகமாகிவிடும்.
இதை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 93 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சில பணியிடங்களுக்கு அரசின் ஊதியத்தை நியமிக்க முடியாத பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.