தமிழ்நாடு (Tamil Nadu)

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது

Published On 2024-07-29 05:01 GMT   |   Update On 2024-07-29 05:01 GMT
  • இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
  • பொது கலந்தாய்வு இன்று தொடங்கி செப்டம்பர் 3-ந்தேதி வரை நடை பெறுகிறது.

சென்னை:

தமிழகத்தில் உள்ள 433 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது. சிறப்பு பிரிவில் 9,639 இடங்கள் இருந்த நிலையில் அதில் 836 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 92 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.

இதையடுத்து பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. 3 சுற்றுகளாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் முதல் சுற்று ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில்26,654 மாணவர்கள் பங்கேற்றார்கள். மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை வருகிற 31-ந்தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.

இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 1-ந்தேதி காலை 10 மணிக்குள் வெளியிடப்படும்.

மறுநாள் 2-ந்தேதி மாலை 5-மணிக்குள் ஒப்புதல் அளித்து மாணவர்கள் இடங்களை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். மேலும் இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

பொது கலந்தாய்வு இன்று தொடங்கி செப்டம்பர் 3-ந்தேதி வரை நடை பெறுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org எனும் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர மாணவ-மாணவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அதனால் கடந்த ஆண்டை விட அதிகமான இடங்கள் நிரம்ப வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News