தமிழ்நாடு

சிறுத்தை நடமாட்டம்: அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2024-04-12 07:50 GMT   |   Update On 2024-04-12 07:50 GMT
  • செந்துறை போலீசார் ஒலி பெருக்கியின் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
  • முந்திரி காட்டில் சிறுத்தையை தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு முந்திரிக் காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொன்பரப்பி கிராம மக்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் பொன்பரப்பி கிராமத்திற்கு சென்று கிராம மக்கள் கூறிய சிறுத்தையின் கால் தடம் மற்றும் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

நேற்று நள்ளிரவு நெருக்கமான குடியிருப்புகள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த செந்துறை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்துள்ளது.

சிறுத்தை மருத்துவமனை சாலையின் குறுக்கே வந்து கம்பி வேலியை தாண்டி செல்லும் காட்சிகள் மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து செந்துறை போலீசார் வாகனத்தில் சென்றபடி ஒலி பெருக்கியின் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைப் பார்த்து இது சிறுத்தை தான் என்று உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு பிரிவு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து தெர்மல் டிரோன் கேமராவை வைத்து சிறுத்தையை இருக்கும் இடத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சிமெண்ட் ஆலை சுரங்கம் மற்றும் முந்திரி காட்டில் சிறுத்தையை தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் செந்துறை, பொன்பரப்பி ஆகிய ஊர்களில் முந்திரி காடுகள், நீர்நிலைகளில் கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். 3 பிரிவுகளாக பிரிந்து வனத்துறை அதிகாரிகள் கேமராக்களை பொருத்தினர்.

இந்நிலையில் சிறுத்தை நடமாட்டத்தால் ஏற்பட்ட அச்சம் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி சென்ற மாணவர்கள் மதியம் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News