தமிழ்நாடு

குரங்கம்மை: விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2024-08-21 06:40 GMT   |   Update On 2024-08-21 06:40 GMT
  • மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
  • அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பீளமேடு:

குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று முதல் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை விமான நிலையத்திலும் விமான பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அடங்கிய மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சிங்கப்பூருக்கு தினமும், சார்ஜாவுக்கு 4 நாட்கள், அபுதாபிக்கு 3 நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சிங்கப்பூரில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த நாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வருபவர்கள் மட்டும் இன்றி, பிற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிளும் கோவை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

விமானத்தில் வந்திறங்கும் பயணிகளுக்கு மருத்துவக்குழுவினர் முதல் கட்டமாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கின்றனர். அதேபோல் கொப்புளங்கள் உளளனவா? என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர்.

நேற்று கோவை விமான நிலையத்திற்கு 3 வெளிநாட்டு விமானங்களில் 275 பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் அல்லது அம்மை கண்டறியப்பட்டால், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகமும், ஏர்போர்ட் சுகாதார மருத்துவ குழுவினரும் இணைந்து பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இருக்கின்றனர். வெளிநாட்டு பயணிகள், பரிசோதனைக்கு பின்பே நகருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அறிகுறிகளளோ, அம்மையோ கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு வசதியாக, விமான நிலைய வளாகத்தில் ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News