தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதி: 2-வது நாளாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு சேகரிப்பு

Published On 2023-02-17 06:55 GMT   |   Update On 2023-02-17 07:07 GMT
  • 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 321 பேரும், மாற்றுத்திறனாளிகள் 32 பேரும் என 353 பேர் உள்ளனர்.
  • வாக்களிக்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாக வரும் 20-ந் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 321 பேரும், மாற்றுத்திறனாளிகள் 32 பேரும் என 353 பேர் உள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடி செல்லாமல் தபால் ஓட்டாக பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. 100 சதவீத ஓட்டை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 4-ந் தேதிக்குள் இது போன்றவர்கள் பட்டியல் பெறப்பட்டு அவர்களிடம் தனி படிவம் பெறப்பட்டது.

சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் குமரன் தலைமையில் இந்த பணிகள் நடந்தது. தபால் வாக்குக்காக பதிவு செய்தவர்களிடம் தபால் ஓட்டை பெற 6 குழுக்கள் அமைக்கப்பட்டன. நேற்று முதல் இந்த குழுவினர் போலீஸ் பாதுகாப்புடன் அந்த வாக்காளர்களின் வீட்டுக்கே சென்று தபால் ஓட்டை பதிவு செய்ய வைத்தனர்.

முதியவர்களிடம் யாருக்கு வாக்களிக்க உள்ளீர்கள் என்று கேட்டு அதற்கு தந்தார் போல் அதிகாரிகள் வசதிகள் செய்து கொடுத்தனர். நேற்று காலை தொடங்கி மாலை வரை தபால் வாக்கு சேகரிப்பு பணி நடந்தது. இதில் சில இடங்களில் முதியவர்கள் இல்லாததால் தபால் வாக்கு பதிவு செய்ய முடியவில்லை. நேற்று மாலை அந்த பெட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கொண்டுவரப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டு ள்ளது. இதனையடுத்து நேற்று வீட்டில் இல்லாதவர்களிடம் இன்று 2-வது நாளாக 6 பேர் கொண்ட குழுவினர் தபால் வாக்கு சேகரிக்க சென்றனர். அவர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு சென்றனர். இன்று வாக்களிக்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாக வரும் 20-ந் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

வரும் 20-ந் தேதியும் 6 பேர் கொண்ட குழுவினர் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்கு வருவார்கள் அன்று வாக்களிக்காதவர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றும் அந்த வாக்காளர்கள் இல்லையென்றால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News