தமிழ்நாடு

திருப்பூரில் வேலைக்கு வந்த வங்கதேச தொழிலாளர்கள் 200 பேருக்கு போலி ஆதார் கார்டுகள் தயாரிக்க முயற்சி

Published On 2024-10-03 07:22 GMT   |   Update On 2024-10-03 07:22 GMT
  • போலி ஆதார் கார்டு தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
  • புரோக்கர்கள் யார் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூரில் சில நாட்களுக்கு முன் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் சிலருக்கு திருப்பூர் அருள்புரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் போலியாக ஆதார் கார்டு பெற்று கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

போலி ஆதார் கார்டு தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில் 4 ஆண்டுகளாக மாரிமுத்து உள்ளூர், வெளியூர் நபர்கள் உள்ளிட்ட ஏராளமான நபர்களுக்கு குறிப்பிட்ட தொகையை பெற்று கொண்டு ஆதார் பெற்று கொடுத்துள்ளார். மேலும் ஆதார் கார்டு பெற சான்று வழங்கிய பல்லடத்தை சேர்ந்த அரசு டாக்டர், இ-சேவையில் உள்ள பெண் பணியாளர் மற்றும் பான் கார்டு வாங்கி கொடுத்த வாலிபர் என 3 பேரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களிடம் விசாரித்த பின் இந்த சம்பவம் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் மாரிமுத்துவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு எழுதி கொடுக்கும் புரோக்கராக செயல்பட்டு வந்த அவர் வங்கதேசத்தில் இருந்து வருபவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு போலியாக ஆதார் கார்டு தயாரித்து கொடுத்துள்ளார்.

மேலும் அவர் மாநகராட்சி அலுவலகத்தில் பேக் ஒன்றை வைத்திருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று பேக்கை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதில் போலியாக ஆதார் கார்டு பெற 200 விண்ணப்பங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது மட்டுமின்றி வங்கதேச தொழிலாளர்களை திருப்பூர் அழைத்து வரும் புரோக்கர்கள் போலியாக ஆதார் கார்டு பெற மாரிமுத்துவை அணுகுமாறு தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். எனவே புரோக்கர்கள் யார் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News