தமிழ்நாடு

பழனி கோவிலில் காலாவதியான 55,000 பஞ்சாமிர்த டப்பாக்கள் கொட்டி அழிப்பு

Published On 2024-02-16 07:34 GMT   |   Update On 2024-02-16 07:34 GMT
  • கடந்த மாதம் பழனியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
  • கோசாலையில் காலாவதியான பஞ்சாமிர்த டப்பாக்கள் கொட்டி அழிக்கப்பட்டன.

திண்டுக்கல்:

முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை கண்டிப்பாக தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் செல்வது வழக்கம். இது தவிர ஆன்லைன் மூலமும் பணம் கட்டினால் வீடுகளுக்கே பஞ்சாமிர்தம் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பழனியில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கூடுதலாக பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.

இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பஞ்சாமிர்தம் தேக்கமடைந்தது. குறிப்பிட்ட நாளுக்கு மேல் பஞ்சாமிர்தத்தை விற்பனைக்கு வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததால் தைப்பூசத் திருவிழாவுக்காக தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பஞ்சாமிர்தத்தை அழிக்க உணவு பாதுகாப்புத்துறையினர் உத்தரவிட்டனர்.

அதன்படி ரூ.40க்கு விற்பனைக்காக வைத்திருந்த பஞ்சாமிர்த டின்கள் 55 ஆயிரம் டப்பாக்கள் கொட்டி அழிக்க முடிவு செய்யப்பட்டது. கள்ளிமந்தயத்தில் பழனி கோவிலுக்கு உட்பட்ட கோசாலை செயல்பட்டு வருகிறது.

அந்த கோசாலையில் காலாவதியான பஞ்சாமிர்த டப்பாக்கள் கொட்டி அழிக்கப்பட்டன. கடந்த வாரம் கோவில் பிரசாதம் தரமற்ற முறையில் இருப்பதாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரசாத மாதிரிகள் மற்றும் பஞ்சாமிர்தத்தை ஆய்வுக்கு எடுத்துச் சென்றபோது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News