தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 2 தொழிலாளர்கள் பலி

Published On 2024-08-14 09:14 GMT   |   Update On 2024-08-14 09:14 GMT
  • பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனித்தனி அறைகள் உள்ளன.
  • பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் மூலப்பொருட்கள் ஒரு வாகனத்தில் வந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ் உரிமத்துடன் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் ஜெயராஜ் என்பவரிடம் ஒப்பந்தத்திற்கு கண்ணன் என்பவர் பட்டாசு ஆலையை எடுத்து நடத்தி வருகிறார்.

இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனித்தனி அறைகள் உள்ளன. அங்கு பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பட்டாசு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பட்டாசு ஆலையில் மல்லி, மானகசேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை அவர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்து பட்டாசு தயாரிப்பை தொடங்கினர். முதலில் வெடிமருந்து கலவை பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில் இருந்து பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து மற்றும் மூலப்பொருட்கள் ஒரு வாகனத்தில் வந்தது. அதனை தொழிலாளர்கள் இறக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்த விநாடி அருகில் இருந்த கட்டிடங்களிலும் தீ பரவி 5-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானது.

இந்த விபத்தில் புலிக்குட்டி மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் யாராவது இந்த விபத்தில் சிக்கி உள்ளார்களா? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள். மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டாசு தயாரிப்பு மற்றும் விபத்து தடுப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து குழுக்கள் அமைத்து ஆய்வு செய்தாலும் இன்னும் பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் மீறுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. உரிமையாளர் மட்டுமே ஆலையை நடத்த வேண்டும் என விதிமுறைகளை விதித்தாலும் உரிமையாளர் மற்ற நபரிடம் ஒப்பந்தத்திற்கு விடுவதும் அரங்கேறி வருகிறது.

இதுபோன்று விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த நடிகரும், மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரியுமான சுரேஷ்கோபி நேற்று சிவகாசியில் உள்ள தனியார் பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அவர் ஆய்வு செய்த மறுநாளே மீண்டும் ஒரு பட்டாசு ஆலை விபத்து ஏற்பட்டு 2 தொழிலாளர்கள் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News