ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்... பயணிகள் புகார்
- பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது.
- பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
சென்னை:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வெளியூர் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி, கோவை, நாகை, நெல்லை செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் விழாக்கால கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல அதிகபட்ச கட்டணம் - ரூ.3700 என்றும் தற்போது ரூ.4100 வரை வசூலிக்கப்படுகிறது.
பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஒரு நிலையான கட்டணத்தை வசூலிக்காமல் பண்டிகை காலத்தை மையமாக வைத்து கட்டணத்தை உயர்த்தி வருவதை அரசு தடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.